பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு விளிம்புத் தொகையை உயர்த்தி வழங்காத பொதுத்துறை ஆயில் நிறுவனங்களை கண்டித்து தமிழ்நாடு பெட்ரோலியம் வணிகர்கள் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

பெட்ரோலிய சில்லறை விற்பனை சங்கத்தின் மண்டல அளவிலான போராட்ட விளக்க கூட்டம் சேலத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முரளி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

தமிழ்நாடு பெட்ரோலியம் வணிகர்கள் சங்கத்தின் நியாமான கோரிக்கையை பொதுத்துறை ஆயில் நிறுவனங்கள் ஏற்க மறுப்பதோடு நிலுவைத்தொகை குறித்த எங்களது கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்க முன்வரவில்லை என்று குற்றம்சாட்டினார்.

எனவே, இந்தபிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்றார்.

நவம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் கொள்முதல் நிறுத்தப்போராட்டமும், அதனைத்தொடர்ந்து 5ம் தேதி முதல் பெட்ரோல் விற்பனை நிலையங்களின் விற்பனை நேரத்தை குறைக்கும் விதமாக காலை 9மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே செயல்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், மாதந்தோறும் 2 மற்றும் 4வது சனிக்கிழமைகளில் முழுநேர விடுமுறை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.