Asianet News TamilAsianet News Tamil

ஐட்ரோகார்பனுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து போராட்டம் – நெடுவாசல் 99…

Struggle Against the hydrocarbon in neduvasal on 99th day
Struggle Against the hydrocarbon in neduvasal on 99th day
Author
First Published Jul 20, 2017, 8:56 AM IST


புதுக்கோட்டை

ஐட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து நெடுவாசலில் 99-வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஐட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனைக் கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12–ஆம் தேதி தங்களது இரண்டாம் கட்ட போராட்டத்தைத் தொடங்கினர்.

அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்களை நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 99–வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது.

இதில் ஐட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து நெடுவாசல் ஐட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து நெடுவாசலில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியது:

"ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தித் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து போராடி வருகிறோம். தற்போது திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்காது, விவசாயத்துக்கும் பாதிப்பு இருக்காது என ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதனால் திட்டத்தை செயல்படுத்தவே அவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்தத் திட்டத்தை ரத்து செய்வது குறித்து அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதும் தெரிகிறது. திட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை.

இதைக் கண்டித்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். மத்திய, மாநில அரசுகள் திட்டத்தை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம்" என்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios