Struggle after struggle members are gone to sea

நாகப்பட்டினம்

வேலை நிறுத்த போராட்டத்திற்கு பிறகு கடலுக்குச் சென்ற நாகப்பட்டினம் மீனவர்கள் குறைந்த அளவு மீன்களை பிடித்துக் கொண்டு கரைக்குத் திரும்பினர். மீன் கிடைக்காததால் கடலிலும் போராட்டமாகவே இருந்தது.

கடந்த 6-ஆம் தேதி நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், மீனவர் பிரிட்ஜோ (21) சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், 3 பேர் காயமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை கடற்படையையும், அரசையும் கண்டித்து நாகை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும், உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பின்னர் ஒன்பது நாள்களாக ஈடுபட்டு வந்த வேலை நிறுத்த போராட்டதைக் கைவிட்டு கடந்த 15-ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்த நிலையில் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற நாகை மீனவர்களில் ஒரு சிலர் நேற்று காலை கரைக்குத் திரும்பினர்.

ஒன்பது நாள்களுக்கு பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு குறைவான மீன்களே கிடைத்துள்ளது. சொல்லும்படி ஏதும் கிடைக்கவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அக்கரைபேட்டை புதிய மீன்பிடி இறங்கு தளத்திற்கு மீன்களை வாங்குவதற்காக பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

ஆனால், வேலை நிறுத்தத்துக்கு பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு குறைந்த அளவே மீன்கள் கிடைத்ததால் வியாபாரம் டல் அடித்தது. மீன் விற்பனையாளர்களும், மீன் வாங்க வந்தவர்களையும் இது வலுவாக பாதித்தது.