நெல்லையில் சூறைக்காற்று அடித்ததில் அரும்பாடு பட்டு வளர்த்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட்ட வாழைகள் அடியோடு முறிந்து நாசமானதால் விவசாயிகள் மீளா துயரத்தில் மூழ்கினர்.

நெல்லை மாவட்டத்தில், கல்லூர், பழவூர், கொண்டாநகரம், கருங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை போன்றவை கோடகன் கால்வாய் மூலம் பயிரிப்பட்டு வருகிறது.

பருவ மழையை மட்டுமே நம்பியிருந்த அப்பகுதி விவசாயிகள், அதுவும் பொய்த்து போனதால் நெல் நடவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனையடுத்து வாழை பயிராவது வாழவைக்கும் என்று நம்பி அதனை பயிரிட்டனர் விவசாயிகள்.

அணைகளின் குறைவான நீர்மட்டம், கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாத நிலை என்று பல்வேறு தடைகள் இருந்தாலும் ஒரு கிலோ மீட்டர் சென்று கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் வாழைகளுக்கு அதிகளவு செலவு செய்து நீர் பாய்ச்சினர்.

இப்படி அரும்பாடு பட்டு வளர்த்த வாழைகள் இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில், நேற்று முன்தினம் பேட்டை, சுத்தமல்லி பகுதியில் திடீரென சூறைக்காற்று அடித்தது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட வாழைகள் முறிந்து சேதமாயின. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனித்து, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோருகின்றனர்.