கன்னியாகுமரி அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலுவடைந்து அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளது என ஸ்கைமெட் வெதர் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், தென் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து “ஸ்கைமெட் வெதர்” வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது-

தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி , தாழ்வுமண்டலமாக வலுவடைந்துள்ளது. இது நேற்று காலை இலங்கைக்கு தெற்கே , தென்கிழக்கே கன்னியாகுமரியில் இருந்து 500 கி.மீ தொலைவில் மையம் கொண்டு இருந்தது.

இந்நிலையில்,  இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், மேலும் தீவிரமடைந்து, கன்னியாகுமரிக்கு தெற்கே, தென்கிழக்கே 210 கி.மீ தொலைவிலும், இலங்கையின் காலே நகரில் இருந்து 185 கி.மீ தொலைவில் இன்று காலை நிலவரப்படிஇருக்கிறது.  

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக மாறலாம்.

இதன் காரணமாக தென் கடலோர மாவடங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி,ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

வடதமிழகத்தைப் பொருத்தவரை நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 63 மி.மீ மழை பதிவாகியுள்ளது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.