பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள பி.எஸ்.என்.எஸ். பொதுமேலாளர் அலுவலகத்தில பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு ஊழியர்கள் தேசிய சம்மேளனம் சார்பில் கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இந்த மாநாட்டிற்கு மாவட்ட உதவித் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பழனிவேலு, கிளைச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில், “2015-16 ஆம் ஆண்டு போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 2017-ஆம் ஆண்டு சம்பள பேச்சுவார்த்தைக்கு இருதரப்பு கமிட்டியை அமைக்க வேண்டும். மருத்துவத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். முன்னாள் ஊழியர்களின் ஆண்டு உயர்வு தேக்க நிலையை உடனடியாக நீக்க வேண்டும். பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்” என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.