திருவாரூர்

தாசில்தார் அலுவலகத்திற்குள் நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்திய விவசாய தொழிலாளர்களை கைது செய்யாவிட்டால் வேலைநிறுத்த தொடரும் என்று மன்னார்குடி தாசில்தார் அலுவலக பணியாளர்கள் எச்சரித்தனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மற்றும் கோட்டூர் ஒன்றிய தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் மன்னார்குடி தாசில்தார் அலுவலக வாயிலில் கடந்த நான்கு நாள்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் “வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு உடனே ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள் தாசில்தார் அலுவலகத்திற்கு நுழைந்து அங்கிருந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்தினர் என்று அலுவலக வட்டாரங்கள் கூறுகிறது.

இந்தச் சம்பவத்தை கண்டித்தும், அலுவலகத்திற்குள் நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்திய விவசாய தொழிலாளர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று மன்னார்குடி தாசில்தார் அலுவலக பணியாளர்கள் நேற்று காலை திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பொருட்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்யாவிட்டால் வேலைநிறுத்தம் தொடரும் என்றும் எச்சரித்தனர்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக நேற்று காலை தாசில்தார் அலுவலகத்திற்கு வந்த மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.