story about gutka issue on vijayabaskar
பான் குட்கா விவகாரம் கடந்து வந்த பாதை பற்றி ஆதாரங்களுடன் விளக்கமாக வாசகர்கள் பார்வைக்கு.
2014ம் ஆண்டில் சென்னை சிபிஐக்கு ஒரு புகார் கடிதம் வருகிறது. அந்த புகார் கடிதத்தில் சென்னை, மாதவரத்தில் இயங்கி வரும் ஒரு சட்டவிரோத குட்கா தயாரிக்கும் நிறுவனம் கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்து வருவதாகவும், அந்த வரி ஏய்ப்பை மத்திய அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் அந்த புகார் கடிதம் தெரிவிக்கிறது.
சிபிஐ விசாரணை நடத்தி 2015 மார்ச் மாதத்தில், விசாரணை முடிக்கிறது. சிபிஐ விசாரணையில், சென்னை மாதவரத்தில் சட்டவிரோத குட்கா தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. குட்கா தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரு பொருள்.

இதனால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக காவல்துறைதான். ஆகையால் இந்த புகார் மனு மற்றும் விசாரணை அறிக்கையை தமிழக காவல்துறைக்கு அனுப்பலாம் என்று முடிவெடுக்கப்பட்டு, புகார் மனுவும், விசாரணை அறிக்கையும் சென்னை மாநகர ஆணையாளர் ஜார்ஜிடம் அனுப்பப்பட்டது.
ஜார்ஜ் இது பற்றி சென்னை மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமாரை விசாரிக்க ஆணையிட பூர்வாங்க விசாரணை செய்த ஜெயக்குமார், 2015 ஆ ஆண்டு ஜூன் மாதம் மாதவரம் குட்கா கிடங்கில் சோதனை நடத்தினார்.
சோதனையில், மூட்டை மூட்டையாக மாவா, குட்கா ஆகியவை கைப்பற்றப்பட்டது . சோதனை நடந்த மறுநாள் மாதவரம் துணை ஆணையர் விமலா தலைமையிலான காவல்துறையினர், மாதவரம் கிடங்குக்கு சீல் வைத்தனர்.
இந்த விசாரணை, சம்பத் என்ற ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பத், கைப்பற்றப் பட்ட பொருள்களில் இருந்து மாதிரியை எடுத்து, Food Safety Organisation என்ற உணவுப் பாதுகாப்பு சோதனைக் கூடத்துக்கு அனுப்பினார்.
ஆனால் அதன் பின்னர் இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்னர் இது பற்றி வருமான வரித்துறை புலனாய்வு முதன்மை செயலர் பாலகிருஷ்ணன் அப்போதைய தலைமை செயலருக்கு பான் குட்கா அதிபர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் , ஐபிஎஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன் , ஜார்ஜ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கடிதம் அளிக்கிறார்.
ஆனாலும் எந்த வித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் கமிஷனர் ஜார்ஜ் தானாக முன் வந்து கடிதம் ஒன்றை தலைமை செயலருக்கு புகாராக அனுப்பியதும் அதில் கீழ் மட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பற்றி கேட்டதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனிடையே இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நேற்று மாலை டைம்ஸ் நவ் ஆங்கில தொலைக்காட்சி ஆதாரத்துடன் வருமான வரித்துறை ஆவணங்களை வெளியிட்டது. வருமான வரித்துறை அதிகாரிகள் வெறும் மாமூல் பட்டியலை மட்டும் அனுப்பவில்லை. அந்த சட்டவிரோத குட்கா நிறுவனத்தை நடத்தியவரிடம் இருந்து ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் முன்பாக அளிக்கப்படும் வாக்குமூலம்தான் நீதிமன்றத்தின் முன் செல்லாது. ஆனால் வருமானவரித் துறை, கஸ்டம்ஸ் போன்ற அதிகாரிகள் முன்பு அளிக்கப்படும் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் செல்லுபடியாகும்.
மேலும் இந்த ஆவணங்கள் முக்கியத்துவம் பெறுவதற்கான மற்றொரு காரணம், இது ஒரு சாதாரணமான டைரி குறிப்புகள் அல்ல. ஒவ்வொரு பணப் பட்டுவாடாவுக்கும் வவுச்சர் எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் அனைத்துமே நீதிமன்றத்தில் செல்லுபடியாகத் தக்கவை.

வருமான வரித் துறை சோதனை நடத்திய பிறகு, எம்டிஎம் குட்கா நிறுவனத்தின் பங்குதாரர் மாதவ ராவிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அந்த நிறுவனத்தின் பணப்பட்டுவாடா லெட்ஜரில் உள்ள ஒவ்வொரு பதிவுக்கும் அவரிடம் விளக்கம் கேட்டு வாக்குமூலம் தயாரித்துள்ளனர். இந்த விபரத்தை, வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு இயக்குநர் பாலகிருஷ்ணன் தனது கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இந்தவிவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அமைச்சர் விஜய பாஸ்கர் , ஐபிஎஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன் , ஜார்ஜ் உள்ளிட்டோர் பணம் பெற்றது ஆவணத்தில் தெளிவாக உள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை கட்டாயம் வரும் என தெரிகிறது.
