திருவாரூர்

கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடுகளைத் தடுத்து நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணைப்பதிவாளரிடம், திமுக நிர்வாகிகள் வலியுறுத்தினர். 

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. 

அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தலுக்கென அதிகாரிகளை மாவட்ட நிர்வாகம் நியமித்துள்ளது. மேலும், நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி முதற்கட்டத் தேர்தல் மார்ச் 26-ல் நடைபெறும் என்றும், இதனையொட்டி மார்ச் 16-ல் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

மேலும், மார்ச் 21-ல் வாக்குரிமை உள்ளவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆட்சேபணைக்குரிய வாக்காளர்கள் குறித்து இறுதி முடிவெடுக்கப்பட்டு இறுதிப்பட்டியல் 22-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

ஆனால், மார்ச் 16-ல் உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் வெளியாகவில்லை. இந்த நிலையில், திமுக மாவட்டச் செயலர் பூண்டி கே.கலைவாணன் தலைமையில் அதன் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், இணைப்பதிவாளர் மற்றும் துணைப்பதிவாளரை நேரில் சந்தித்தனர். 

அவர்கள், "கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடுகளைத் தடுத்து நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.