13  பேரை பலிகொண்டு கடும் எதிர்ப்பு காரணமாக இழுத்து மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையின் நிர்வாக அலுவலகத்தைத் திறக்கவும், அதிகாரிகள் உள்ளே சென்று பணி புரியவும் பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடைபெற்ற பெரும் போராட்டத்தில் 13 அப்பாவிப் பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை  மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு செய்தது. இந்த மனுவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடியது. ஆனால், தமிழக அரசின் வாதத்தை நிராகரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது  அப்போது  காற்று, நீர் மாசு ஏற்படுத்தாத வகையில் ஆலை செயல்படுவதாகவும், விதிகளை மீறவில்லை என்றும் வேதாந்தா குழுமம் சார்பில் வாதிடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் ஆலை மூடப்பட்டதால், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து காப்பரை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்தது. எனவே ஆலையை திறக்க நீதிபதிகள் உத்தரவிட வேண்டும் என  வாதிடப்பட்டது.

ஆனால் அதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையின் நிர்வாக அலுவலகத்தைத் திறக்கவும், அதிகாரிகள் உள்ளே சென்று பணி புரியவும் அனுமதி அளித்தனர்.பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்பு தூத்துக்குடி மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது, இந்த ஆலையைத் திறப்பதற்கான முதல் படியில் வேதாந்தா குழுமம் வெற்றி பெற்றுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. தொடர்ந்து படிப்படியாக ஆலை திறக்கப்படும் வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.