கோயம்புத்தூர்
 
ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கொலை வழக்காக மாற்ற கோரி கோயம்புத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், "ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும், இந்த கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டன.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம், பாகோவை டாடாத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் இலக்கியன் தலைமை வகித்தார். 

இதற்கு மைய மாவட்ட செயலாளர் நிலா மணிமாறன் மற்றும் சித்தார்த்தன், பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கண்ணகி, கரிகாலன், அந்தோணி உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்கள்.

இதில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.