தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? போலீஸ் ஆட்சியா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த ஹரிராகவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்ட மக்கள் உரிமை பாதுகாப்பு மைய நிர்வாகியான வழக்குறிஞர் ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஊர்வலம் சென்ற போது கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை தூண்டியதாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் மற்றும் வழக்குறிஞர் ஹரிராகவன் ஆகியோர் மீது சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 

இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட வாஞ்சிநாதன், ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே, நீதிமன்றத்தில் சரணடைந்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய நிர்வாகி வழக்குறிஞர் ஹரிராகவன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக ஹரிராகவன் மீது 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 24-ம் தேதி ஜாமீன் பெற்ற நிலையில் 26-ம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஹரிராகவன் கைதானதை எதிர்த்து மனைவி சத்தியபாமா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? போலீஸ் ஆட்சியா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.