புதுச்சேரி அரசு சார்பில் ஜெயலலிதாவுக்கு முழுஉருவச் சிலை…நாராயணசாமி அறிவிப்பு…
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி அரசு சார்பில் ஜெயலலிதாவுக்கு முழு திருவுருவச்சிலை நிறுவப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்..
ஆளுநர் உரை இல்லாமல் புதுச்சேரி சட்டசபை இன்று கூடியது. அவை கூடியதும் முதல் நிகழ்ச்சியாக, மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா,, புதுச்சேரி முன்னாள் துணை சபாநாயகர் ஏ.வி. ஸ்ரீதரன், முன்னாள் சபாநாயகர் சிவகுமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் சாதனைகள் மற்றும் நிர்வாகத் திறமை குறித்து புகழாரம் சூட்டினர்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரெங்கசாமி, மாநில உரிமைகளையும், நலன்களையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க விரும்பாதவர் ஜெயலலிதா என பெருமையுடன் கூறினார்.
இதனிடையே அரசு சார்பில் , புதுச்சேரியில் ஜெயலலிதாவின் முழு திருவுருவச்சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
