state transport corporation Organized a new luxurious bus on next month
அரசு போக்குவரத்து துறை சார்பில் நவீன பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக தனியார் நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் பஸ்களில், அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இதனால்,பெரும்பாலான மக்கள், வெளி மாநிலங்களுக்கு செல்லும்போது, தனியார் பஸ்களையே விரும்புகின்றனர். இதையொட்டி தமிழக அரசு போக்குவரத்து கழகத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
அரசு சார்பில் இயக்கப்படும் பஸ்களில் பெரும்பாலானவை ஓட்டை உடைச்சலுடன் இருக்கிறது. இதனால், அடிக்கடி கண்டக்டர்கள், பயணிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
கடந்த மாதம் மதுரைக்கு புறப்பட்டு சென்ற அரசு பஸ், சென்னை அருகே தாம்பரத்தை கடந்தபோது, போதிய வசதி இல்லாததால், பயணிகள் தகராறு செய்தனர். இதனால், அந்த பஸ் பெருங்களத்தூர் அருகே நிறுத்தப்பட்டு, அதிகாலை 2 மணியளவில் மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு, பயணிகள் சென்றனர்.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவும், அரசு பஸ்கள் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை போக்கவும் அரசு போக்குவரத்து கழகம் தீவிர ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அதிநவீன சொகுசு பஸ்சை வாங்கியுள்ளது. இந்த பஸ் அடுத்த மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நவீன சொகுசு பஸ்சில், பயணம் செய்யும் மக்களின் கருத்துக்களை பெற்ற பின்னர், மேலும் புதிய பஸ்களை இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆண்டு தோறும் புதிய பஸ்கள் வாங்கப்படுகிறது. ஆனால், ஓரிரு நாட்களில் அந்த பஸ்கள் பழுதாகி, பயன்பாட்டுக்கு உதவாத நிலைக்கு தள்ளப்படுகிறது.
இதனை தடுக்க முறையாக பராமரிக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் இதுவரை யோசிக்கவில்லை. பல லட்சம் செலவில் புதிய பஸ்களை வாங்கினாலும், அதை முறையக பராமரிக்காமல் இருப்பதால், பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். இதனாலயே தனியார் பஸ்களை நாடுகின்றனர்.
எனவே, அரசு போக்குவரத்து கழகம் அதிநவீன பஸ்களை வாங்குவதுடன், அதை முறையாக பராமரிக்க முன் வரவேண்டும் என்றனர்.
