8 வழிச்சாலைக்காக அரசு கடைபிடித்து வரும் அடக்குமுறையை சட்டப்போராட்டத்தின் மூலம் ஒடுக்குவோம் என சீமான் ஆவேசமாக பேசியுள்ளார். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தூத்துக்குடி மற்றும் 8 வழிச்சாலை மக்களையும் சந்திப்பேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாள் சீமான் தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை ஊமாங்காடு பகுதியில் சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 11 பேரை மல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கில் சீமான் உட்பட 11 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தஅவர் தன்னை கைது செய்ததன் மூலம் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை அரசு ஏற்படுத்துவதாக கூறினார். மேலும் தன்னை கைது செய்தது காரணமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார். அரசு மக்களிடம் கருத்து கேட்பது போல்தான் தாங்களும் கருத்து கேட்பதாக தெரிவித்தார். 90 சதவீத மக்கள் அரசுக்கு நிலம் வாங்கிய பிறகு நாங்கள் மக்களை சந்திப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை இருக்கும் என்று கேள்வி எழுப்பினார். 

10 ஆண்டுகளுக்கு பிறகு கார்களின் எண்ணிக்கை கூடும் என்று அரசு கூறுகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தொகை கூடும். காரை பற்றி சிந்திக்கும் அரசு மக்களுக்கு தேவையான நீரையும், சோறையும் பற்றி சிந்திக்கவில்லை என்றார். 8 வழிச்சாலை என்று பேசினாலே சிறைபடுத்தல் என்றால் ஜனநாயகம் எங்கு கடைபிடிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய சீமான், மக்களுக்கு எதிராக விளைநிலங்களை பறிப்பது கொடுமையான செயல் என்றார். 

தமிழகத்தில் பெரும்பாலான சாலைகள், சென்னைக்கு பல சாலைகள் தரமில்லாமல் உள்ளது. ஆனால் 8 வழிச்சாலைக்கு முணைப்பு காட்டுகின்றனர். இதுபோன்ற அடக்குமுறை நிலையை தகர்க்க சட்டப்போராட்டம் நடத்துவோன் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு தூத்துக்குடி மக்களை சந்திக்க உள்ளதாகவும், அதேபோல் மீண்டும் காவல்துறையில் அனுமதி கேட்டு மக்களை சந்திப்போன் என்று சீமான் கூறியுள்ளார்.