மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை 100 நாள் வேலை திட்டத்துக்கான சம்பளத்தை வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மாசிலாமணி தலைமை தாங்கினார். கட்சியின் வட்ட செயலாளர் மணி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் ராசையன் கலந்து கொண்டு பேசினார்.

போராட்டத்தின்போது, கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு உடனே வழங்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.1400 கோடியை தமிழக அரசு உடனே பெற்று, நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு 150 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் ராயர், கஸ்தூரி, வைரவன் மற்றும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ஞானசெல்வி மற்றும் அலுவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.