மதுரை,

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கு 291 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரி பார்க்கும்பணி தொடங்கியது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றதொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் மாதம் 19–ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 97 இடங்களில் நகர்பகுதிகளில் 159, புறநகர் பகுதிகளில் 132 என மொத்தம் 291 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஆயிரத்து 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 375 கட்டுப்பாட்டு கருவிகளும் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல்நிலை பரிசோதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் நடந்தது.

ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பெல் நிறுவன என்ஜினீயர்கள் எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான வீரராகவ ராவ் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீவா, உதவி தேர்தல் அலுவலர்கள் முருகையன், சரவணப்பெருமாள், என்ஜினீயர்கள் துர்க்கையா, வசந்தையா உட்பட பலர் உடன் இருந்தனர்.