ரூ.200 செலுத்தி அஞ்சல் தலை சேமிப்புத் திட்டக் கணக்கினைத் தொடங்கினால் அவ்வப்போது வெளியிடப்படும் அஞ்சல் தலைகளை அதன் விபரங்களுடன் கணக்கு தொடங்கியவரின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும் என்று அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் இரா.சுவாமிநாதன் கூறினார்.

போடி அருகே திங்கள்கிழமை, மக்களை தேடி அஞ்சல்துறை - அஞ்சலக நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. 

கடந்த வாரம் அஞ்சலக வாரம் கொண்டாடப்பட்டதன் தொடர்ச்சியாக இப்பிரச்சாரம் நடைபெற்றது.

போடி அருகே சில்லமரத்துப்பட்டி அஞ்சலகத்தில், தேனி கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் இரா.சுவாமிநாதன் தலைமை வகித்து பிரசாரத்தை தொடங்கி வைத்தார். 

சில்லமரத்துப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி அவர் கூறியது:

“அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு, மாதாந்திர தொடர் சேமிப்பு கணக்கு, குறிப்பிட்ட கால வைப்பு நிதி கணக்கு, அஞ்சல் ஆயுள் காப்பீடு, பாரத பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்து வருகின்றோம்.

இவை தவிர ரூ.200 செலுத்தி அஞ்சல் தலை சேமிப்புத் திட்டக் கணக்கினைத் தொடங்கினால் அவ்வப்போது வெளியிடப்படும் அஞ்சல் தலைகளை அதன் விபரங்களுடன் கணக்கு தொடங்கியவரின் முகவரிக்கே அனுப்பி வைக்கிறோம்.

இதன் மூலம் அஞ்சல் தலை சேகரிக்கும் ஆர்வத்தை உருவாக்கி வருகிறோம். இதன் மூலம் விலை மதிப்பில்லா அஞ்சல் தலைகளை சேகரிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்” என்றார்.

நிகழ்ச்சியில் சில்லமரத்துப்பட்டு அஞ்சலக அலுவலர் சூரியா மற்றும் நாகலாபுரம், பொட்டிப்புரம், ராசிங்காபுரம், போடி-அம்மாபட்டி, சிலமலை ஆகிய கிளை அஞ்சலக ஊழியர்கள் பங்கேற்றனர்.