தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சம்பளம் வழங்காததை கண்டித்து அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி குப்பாண்டம்பாளையம், இந்த ஊராட்சிக்கு உள்பட்ட கொளத்தூர், கரட்டூர், குப்பாண்டம்பாளையம், கருல்வாடிப்புதூர், கம்மங்கரடு ஆகிய பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றன. இந்த பணியில் அந்த பகுதியை சேர்ந்த 825 பேர் ஈடுபட்டனர். இந்த தொழிலாளர்களுக்கு 85 நாட்களுக்கு உண்டான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி இந்த பகுதியில் தனி நபர் கழிப்பிடம் கட்டும் திட்டத்தின் கீழ் 60 பேர் கழிப்பறை கட்டி உள்ளனர். இதற்காக அரசின் சார்பில் 60 பயனாளிகளுக்கும் தலா ரூ.12 ஆயிரம் வழங்கவேண்டும். இந்த தொகையும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் குப்பாண்டம்பாளையம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் 500–க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு நேற்று காலை 10 மணி அளவில் வந்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றிய தங்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து திடீரென அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அப்போது அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி சுந்தர் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் இருந்தனர். இதுபற்றி அறிந்ததும் அதிகாரிகள் உடனே விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்தில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த தொழிலாளர்கள் தங்களுடைய முற்றுகை போராட்டத்தை கைவிட்டு மதியம் 12 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.