தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
கன்னியாகுமரி நாற்கர சாலை தொடங்கும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில், குழந்தைகள் போக்குவரத்து பூங்கா மற்றும் அருங்காட்சியகம் அமைய உள்ளது. இந்த இடத்தை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அப்போது அவர்,செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
குற்றம் செய்திருக்கிறார் என அடையாளம் காணப்பட்ட முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க நீதிமன்றத்தை அணுகியிருக்கலாம். ஆனால், தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பில்லை, குறிப்பிட்ட ஒரு கட்சியினருக்கு பாதுகாப்பில்லை, மாவட்ட கலெக்டர்களுக்கு பாதுகாப்பில்லை என கூறுகிறார். இதன் பின்னணியில் ஏராளமான விஷயங்கள் உள்ளதாக நான் கருதுகிறேன்.
நான் இன்னும் தலைமைச் செயலாளராக நீடிக்கிறேன் என அவர் சொல்வது, ஒரு புரட்சியாளன் சொல்வதைப்போல உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொல்லியபடி செய்தேன் என அவர் கூறியுள்ளது, மறைந்த முதல்வரை கொச்சைப்படுத்துவதற்கு சமம்.
அவரது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அதற்கெல்லாம் மறைந்த முதல்வர்தான் காரணம் என பொருளாகுமா?. எந்த அடிப்படையில் அவ்வாறு சொல்கிறார்? தமிழக மக்களுக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கும் அவர் செய்திருக்கும் துரோகம் என நான் கருதுகிறேன். இதற்காக அவர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக முதல்வர் தெளிவான நடவடிக்கைகளை எடுப்பார் என நம்புகிறேன்.
பாஜக, தமிழகத்தின் மூன்றாவது அணியல்ல. முதலாவது அணி. அடுத்து கண்டிப்பாக பாஜக ஆட்சிதான் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். பிரதமர் மோடியின் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளன. இதன் மூலம் மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர்.
இந்தியாவில் குடியேறியுள்ள இலங்கைத் தமிழர்கள் எத்தனை காலம் வேண்டுமானாலும் இங்கு இருப்பதற்கான உரிமை உள்ளது. அவர்கள் எப்போது விரும்பினாலும் இலங்கைக்கு செல்லலாம். இது அவர்களின் விருப்பத்தைப் பொருத்தது. இலங்கைத் தமிழர்களை வைத்து அரசியல் நடத்தும் சிலர் இப்பிரச்சனையை வேறுவிதமாக கையாண்டு வருகின்றனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்தாண்டு நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை தமிழர்களை வைத்து சிலர் அரசியல் நடத்துகின்றனர் - பொன்.ராதாகிருஷ்ணன் பகீர்
Latest Videos
