srilankan court orderes to release boats

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் 42 படகுகளை திரும்ப ஒப்படைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கச்சத் தீவை இலங்கை அரசுக்கு இந்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்த பின்னர், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்குவதும், மீனவர்களையும், அவர்களது படகுகளையும் சிறை பிடிப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் சிக்கல் நீடித்து வருகிறது.
கடந்த 2015 ம் ஆண்டு பிப்ரவரி 26 ம் தேதி முதல் நவம்பர் 10 ம் தேதி வரை தமிழக மீனவர்களின் 42 படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்து வைத்தது. 

இது தொடர்பான வழக்கு இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் , தமிழக மீனவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து புத்தளம் மற்றும் தலைமன்னாரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் 42 படகுகளும் வரும் திங்கட்கிழமை விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மனிதாபிமான அடிப்படையில் தமிழக மீனவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் இலங்கை கோர்ட் தெரிவித்துள்ளது. 

ஆனால் இதுவரை 161 படகுகள் இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்..

தற்போது விடுவிக்கப்பட உள்ள படகுகள் நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு சொந்தமான படகுகள் ஆகும்.