இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களை பிப்ரவரி 22 ஆம் தேதி வரை சிறையிலடைக்க இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களை பிப்ரவரி 22 ஆம் தேதி வரை சிறையிலடைக்க இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலுக்குச் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினரால் கைதுசெய்வதும் அத்துமீறுவதும் தொடர்கதையாகிவிட்டது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, புதுச்சேரி, காரைக்கால் என பல்வேறு பகுதி மீனவர்கள் தான் இதில் அதிகம். அந்த வகையில் கடந்தாண்டு இறுதியில் 50க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

50 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் சமீபத்தில் தான் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போதூ எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் மூன்று விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இச்சூழலில் இன்று இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் மீனவர்களை ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 16 மீனவர்களையும் பிப்ரவரி 22ஆம் தேதி வரை யாழ்ப்பாண சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நேற்று தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 135 படகுகளை இலங்கை அரசு ஏலம் விட்டது. அந்தக் கொதிப்பு அடங்குவதற்குள் இத்தகைய காரியத்தில் இலங்கை ஈடுபட்டிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
