தஞ்சாவூர்

தஞ்சாவூரில் துப்பிய எச்சில் தெரியாமல் வேறொருவரின் மேலே பட்டதால் ஏற்பட்ட தகராறில் துப்பியவரின் தாய் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலும் இருவர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக இருவரை காவலாளர்கள் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், மணல்மேடு மேலத்தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவி இந்திராகாந்தி (50). இவர்கள் இருவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்களுடைய மகன் சதீஷ்கண்ணன். இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு கோவிலில் அமர்ந்திருந்தார்.

அப்போது, சதீஷ்கண்ணன் எச்சில் துப்பியுள்ளார். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த மணல்மேடு ஓடக்கரைத் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (35) மீது சதீஷ்கண்ணன் துப்பிய எச்சில்பட்டுவிட்டது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த சிலர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சுரேஷ் அங்கிருந்து சென்று தனது உறவினர்களான சேகர் (40), பன்னீர்செல்வம் ஆகியோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அரிவாள் மற்றும் இரும்பு கம்பிகளை எடுத்துக்கொண்டு மேலும் இருவரை அழைத்துக்கொண்டு சதீஷ்கண்ணனின் வீட்டிற்கு சென்றனர்.

அப்போது, சதீஷ்கண்ணன் வீட்டில் இல்லை. வீட்டில் அவருடைய தாயார் இந்திராகாந்தி, தந்தை கோவிந்தராஜ், பாட்டி சாம்பலம்மாள் ஆகியோர் மட்டுமே இருந்தனர். அவர்களுடன் சுரேஷ் தரப்பினர் தகராறு செய்தனர். மேலும் ஆத்திரமடைந்த அவர்கள், இந்திராகாந்தியை அரிவாளால் வெட்டினர். மேலும் கோவிந்தராஜ், சாம்பலம்மாள் ஆகியோரையும் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த மூவரையும் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். செல்லும் வழியிலேயே இந்திராகாந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவிந்தராஜ், சாம்பலம்மாள் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தஞ்சை தாலுகா காவல் ஆய்வாளர் பசுபதி மற்றும் காவலாளர்கள், சுரேஷ், சேகர், பன்னீர்செல்வம் உள்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிந்து சுரேஷ், சேகர் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற மூவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.