அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு; ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் கைது!
அவதூறுப் பேச்சுக்காக ஆர்பிவிஎஸ் மணியனை கைது செய்ய வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தி வந்தனர்.
அம்பேத்கர், திருவள்ளுவர், பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரை இழிவாகப் பேசியதற்காக ஆன்மிகப் பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில தலைவரான இவர் பல இந்துத்துவ அமைப்புகளில் முக்கியப் பதவிகளில் இருந்திருக்கிறார். தற்போது இந்துத்துவா குறித்த பேச்சுகள் காரணமாக பிரபலமான அறியப்பட்டிருக்கிறார். ஆர்பிவிஎஸ் மணியன் பேச்சு ஒன்றின் வீடியோ கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், சாதி வெறியைத் தூண்டும் வகையில் பேசியிருக்கும் அவர், அம்பேத்கர்தான் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதினார் என்று பலரும் சொல்லிவருகிறார்கள் என்றும் ஆனால் அவர் தன்னுடைய மூளையில் இருந்து அரசியல் சாசனத்தை எழுதி வைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
படகுகளுடன் 19 தமிழக மீனவர்கள் கைது! தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்!
இதேபோல திருவள்ளுவர், திருக்குறள் குறித்தும் பேசியிருக்கும் மணியன், திருவள்ளுவர் என்று ஒரு இருந்ததே இல்லை எனவும் அவர் திருக்குறளை எழுதினார் என்பது நல்ல கற்பனை எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பேச்சுக்காக ஆர்பிவிஎஸ் மணியனை கைது செய்ய வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் இன்று காலை ஆர்பிவிஎஸ் மணியன் கைது செய்யப்பட்டார். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.