Spend Crore ...new buliding Demolition

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தால் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் 1 கோடியே 65 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாத உள்ள புதிய பள்ளிக்கட்டிடம் இடிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டிடம் 8 வழிச் சாலைக்காக திறக்கப்படாமலேயே இடிக்கப்படுவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பணத்தை வீணடிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை-சேலம் இடையே 277 கிமீ தொலைவில் புதிய 8 வழி பசுமை வழிச்சாலை அமைப்பதற்கான பணியை அரசு முழு வீச்சில் நடத்திக் கொண்டு வருகிறது. 8 வழிச்சாலையை அமைத்திட நாம் இழக்கப்போவது 7000 ஏக்கர் விவசாய நிலங்கள், 500 ஏக்கர் வனப்பகுதி, 7 ஆறுகளின் வழித்தடங்கள் இவை மட்டுமின்றி 8 மலைகள் உள்ளிட்டவை இழக்கப்போகின்றோம். 

இந்நிலையில் சுமார் 70 கிமீ சாலை தூரத்தை மட்டும் குறைப்பதற்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதியை செலவழிப்பது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். சேலம்-சென்னை 8 வழி பசுமைச் சாலை அமைவதால் அழியும் பல்லாயிரக்கணக்கான விளை நிலங்களைக் காக்க போராடும் விவசாயிகளை நசுக்கி, அவர்களின் நியாயத்தை புறந்தள்ளிவிட்டு, இந்த அரசு அமைக்கப்போகும் விவசாயிகளின் வேதனை வழிச் சாலையை அமைக்கும் முயற்சியை பழனிசாமியின் அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது என விவசாயிகள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். 

ஆனால் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. போராட்டங்கள் நடத்துவோர்கள் மீது அரசு அடங்கு முறையை கையாள்கிறது. தன் நிலத்தை அரசு எடுத்தால் தன் உயிரை மாய்த்துக்கொள்வோம் என விவசாயிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் பசுமை வழிச்சாலைக்காக பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அரசினர் உயர்நிலை பள்ளி 1 கோடியே 65 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாத கட்டிடத்தை வரும் ஞாயிற்றுகிழமை இடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.