சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் மத்திய சிறைச்சாலை இருந்தது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து கைதிகள் கொண்டு வந்து அடைக்கப்பட்டனர். மேலும், சிறையில் கைதிகளுக்குள் அடிக்கடி மோதல் சம்பவம் ஏற்பட்டது.

இதையடுத்து, பல ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறைச்சாலை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி புறநகர் பகுதியான புழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மத்திய சிறைச்சாலை கட்டி முடித்து, அனைத்து கைதிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

புழல் சிறைச்சாலை வளாகத்தில், கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை அமைந்துள்ளது. சிறையில் உள்ள கைதிகளுக்கு ஏதேனும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால், இங்கு சிகிச்சை அளிக்கப்படும். மேல் சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது வழக்கம்.

இதுபோல், உடல்நிலை பாதிக்கப்பட்ட கைதிகளை, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, கால தாமதம் ஆகிறது. இதனால், உயிரிழப்பு சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இதனை தடுக்க அருகில் உள்ள அரசு மருத்துவமனையில், கைதிகளை அனுமதித்து, சிகிச்சை அளிக்க வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கைதிகளுக்கான வாட்டில் 20 படுக்கை மட்டுமே உள்ளது. மேலும், கைதிகளுக்கு உடல் நிலை பாதிப்பு என அறிந்ததும், அவர்களது உறவினர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் குவிந்தவிடுவார்கள்.

அங்கு இடம் பற்றாக்குறையால், அனைவரும் சாலைக்கு வந்துவிடுவார்கள். இதையொட்டி அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்கவே, ஸ்டான்லி மருத்துவமனையில், புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இங்கு 25 படுக்கைகள் கொண்ட வார்டு முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஒரு டாக்டர், 2 நர்ஸ், 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் 3 எஸ்ஐ, 21 காவலர்கள் பணியில் இருப்பார்கள் என கூறப்படுகிறது.