special vehicles for mother and child

கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த பெண்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல 102 எண்ணுக்கு அழைப்புச் செய்து இலவச வாகன வசதியை மாநிலம் முழுவதும் பெறலாம்.

கடந்த மாதம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் மகப்பேறு முடிந்து தாயும்,சேயும், உடன் ஒருவரும், வீடுவரை இலவசமாக வாகனத்தில் கொண்டு சென்று விடப்படுவார்கள். கடந்த ஒருமாதத்தில் மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் பெண்கள் வீட்டில் கொண்டுபோய் விடப்பட்டுள்ளனர். ஆனால், இந்த திட்டத்தில் வாகனத்தை முன்பதிவு என்பது மருத்துவமனை அதிகாரிகளே செய்ய முடியும்.

இந்த திட்டத்தின் மேலாளர் பி.ரூபன் சந்தோஷ் கூறுகையில், “ கருவுற்ற பெண்கள், மகப்பேறு முடிந்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கவரும் பெண்கள் 102 என்ற எண்ணுக்கு அழைப்பு செய்து தங்களின் முகவரியை தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவித்தால், வீட்டுக்கே வாகனம் வந்து அவர்களை அழைத்துச் செல்லும். பிறந்த குழந்தைக்கு ஒரு வயதுவரை சிகிச்சை, தடுப்பூசி போட இலவசமாக வாகன வசதி பெறமுடியும்.

மருத்துவமனைகல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவமனைகள், பொது சுகாதார மையங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த திட்டத்துக்காக 80 பிரத்யேக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த வாகனத்தில் குழந்தைகளை அமரவைப்பதற்காக 8 இருக்கைகளும், தாய்மார்கள் அமர 16 இருக்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் உள்ள பெரும்பாலான ஏழைக் குடும்பங்களில் பெண்கள் கருவுற்ற பின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல், குழந்தை பிறந்தபின் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லுதல் ஆகியவற்றுக்கு என தனிப்பட்ட முறையில் செலவுசெய்ய வேண்டியது இருக்கிறது. குறிப்பாக புறநகரப் பகுதிகள், கிராமங்களில் போக்குவரத்துக்காகவே ரூ.1000 வரை செலவு செய்கிறார்கள். சிலர் 108 ஆம்புலென்சுக்கு அழைப்புச்செய்து பிரசவத்துக்காக மருத்துவமனை செல்கிறார்கள்.

ஆனால், மகப்பேறுமுடிந்து மாத சிகிச்சைக்கு வரும் போது, ஏழை குடும்பத்தைச் சேர்ந்தபெண்கள் போக்குவரத்துக்காக, சேமிப்பில் இருந்து செலவு செய்ய வேண்டியது இருக்கிறது. இதற்காக சிலர் கடன் வாங்க வேண்டியசூழலும் இருக்கிறது. இதைத் தவிர்பதற்காகவே தாயையும், சேயையும் பாதுகாப்பாக அழைத்து வந்து, சிகிச்சை முடிந்து மீண்டும் வீட்டில் கொண்டு போய் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் செலவு செய்வது தவிர்க்கப்படும். அவர்களின் நிதிச்சுமையும் குறையும்” என்றார்.

2013ம் ஆண்டில் இருந்து சோதனைத் திட்டமாக செயல்படுத்தப்பட்டு இதுவரை 102 வாகனங்கள் மூலம், 1.20 லட்சம் பெண்கள் பயன் அடைந்து இருக்கிறார்கள். இதற்கான வாகனத்தை செஞ்சிலுவை சங்கம் மூலம் பெறப்படுகிறது.

இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறுகையில், “ மகப்பேறு முடிந்து குழந்தையுடன் வீட்டுக்கு செல்லும் பெண்களுக்கு மட்டுமே இந்த திட்டம் இருந்தது. இப்போது விரிவுபடுத்தப்பட்டு, மகப்பேறு காலத்தில் சிகிச்சைக்காக செல்ல வேண்டியதுஇருந்தால்கூட, 102 என்ற எண்ணுக்கு அழைத்தால், வீட்டுக்கே வாகனம் வந்துவிடும்.

இந்த வாகனத்தில் செவிலியர்கள் இருப்பார்கள். மகப்பேறு அடைந்த பெண்ணும் முறையான சிகிச்சை கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காக இந்த திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது. மேலும் குழந்தை பெற்றபின்பும், ஒரு ஆண்டுவரைகுழந்தையை இந்த பிரத்யேகவாகனத்தில் இலவசமாக அழைத்து வரலாம்” என்றார்.