- Home
- Tamil Nadu News
- பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு! NIAக்கு போக்கு காட்டி வந்த முக்கிய குற்றவாளி கைது! சிக்கியது எப்படி?
பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு! NIAக்கு போக்கு காட்டி வந்த முக்கிய குற்றவாளி கைது! சிக்கியது எப்படி?
பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி முகமது அலி ஜின்னா சென்னையில் கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகளாக மாறுவேடத்தில் வாசனை திரவியம் விற்று வாழ்ந்து வந்த இவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம். இவர் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த பகுதியில் மதமாற்றம் குறித்து பிரசங்கம் செய்தவர்களை ராமலிங்கம் கண்டித்ததால் இந்த கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தேசிய புலனாய்வு முகமை
இந்த வழக்கில், மொத்தம் 18 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 13 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த முகமது அலி ஜின்னா உள்ளிட்ட 5 பேர் தலைமறைவாக இருந்ததால் அவர்களை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர்.
சன்மானம் அறிவிப்பு
இந்த 5 பேர் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டது. அதில் முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்ஹானுதீன், ஷாகுல் ஹமீது, நபீல் ஹசன் ஆகிய 5 பேர் புகைப்படங்களுடன் இதுகுறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு நபருக்கு தலா 5 லட்சம் வீதம், 5 பேருக்கு 25 லட்சம் ரூபாய் பணம் சன்மானமாக வழங்கப்படும் என என்ஐஏ சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
முகமது அலி ஜின்னா
இந்நிலையில் நபீல் ஹசன், புர்ஹானுதீன் இரண்டு பேருக்கும் அடைக்கலம் கொடுத்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்து முகமது அலி ஜின்னாவை தீவிரவாத தடுப்பு படையினரும், என்ஐஏ அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் முகமது அலி ஜின்னா சென்னை மற்றும் பெங்களூவில் வசித்து கொண்டு பள்ளிவாசல்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாசனை திரவியம் விற்பனை செய்து வருவதும், சிக்காமல் இருக்க தாடி இல்லாமல் மாறு வேடத்தில் சுற்றி வருவதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அடிக்கடி தான் தங்கும் இடத்தையும், பெயரையும் மாற்றி வந்துள்ளார்.
முக்கிய குற்றவாளியை கைது செய்த என்ஐஏ
இதனை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் தீவிரவாத தடுப்பு படையினர் என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் முகமது அலி ஜின்னாவை சென்னையில் வைத்து மடக்கி பிடித்தனர். மேலும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த அஸ்மத் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் இருவரும் பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மலர்விழி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் முகமது அலி ஜின்னா வரும் ஜனவரி 18ம் தேதி வரையும், அஸ்மத்தை ஜனவரி 19ம் தேதி வரையும் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

