Special training will conduct for Stressed police - Dharmapuri IG

தருமபுரி

தருமபுரியை சேர்ந்த காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைத்து அவர்களுடைய பணித்திறனையும், உடல்நலனையும் மேம்படுத்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று காவல் ஐ.ஜி.டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பது தொடர்பாக இயற்கை மருத்துவர்கள், யோகா பேராசிரியர்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தை காவல்துறையின் ஐ.ஜி.டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் மற்றும் காவல் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். 

இந்தக் கூட்டத்தில் காவல் ஐ.ஜி. டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் பேசியது: "காவலர்களுக்கு பல்வேறு விதமான மன அழுத்தங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய மன அழுத்தத்தை குறைத்து அவர்களுடைய பணித்திறனையும், உடல்நலனையும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்கான ஆலோசனைகளை வழங்க இயற்கை மருத்துவர்கள், யோகா பேராசிரியர்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் பயிற்றுனர்களாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்தப் பயிற்சியை அளிக்க சுமார் 70 பேர் பயிற்றுநர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இக்குழுவினர், பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனைக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட உள்ளனர். அங்கு பயிற்சி பெற்ற பின்னர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் மன அழுத்தம் போக்குவதற்காக தேவையான ஆலோசனைகளை வழங்க உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.