நாமக்கல்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு சென்றுவர சிறப்பு பேருந்து வசதி செய்துதர வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலரிடம் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி, முதுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் எல்.ஜெகதீசன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேற்று  கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த மனுவில், "நாமக்கல் ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த மையத்திற்கு ஆசிரியர்கள் சென்றுவரும் வகையில் காலை மற்றும் மாலை நேரத்தில் சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும். 

விடைத்தாள் திருத்தும் மையங்களில் குடிநீர், கழிப்பறை, மின்விசிறி,  நல்ல காற்றோட்டமான அறைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 

தேநீர் மற்றும் சிற்றுண்டி கிடைத்திட மைய வளாகத்திற்குள் உணவக வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்" போன்ற கோரிக்கைகள் அடங்கிய அந்த மனுவை முதன்மைக் கல்வி அலுவலரிடம் கொடுத்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட முதன்மைக் கல்வி அலுவலர் இதுகுறித்த யோசிப்பதாக தெரிவித்தார்.