கோடை விடுமுறையில் தென் மாவட்டங்களுக்கு 244 முறை இயக்கப்படும் 50 சிறப்பு ரயில்கள்
கோடை காலத்தை முன்னிட்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரெயில்வேயில் 50 சிறப்பு ரயில்கள் 244 முறை இயக்கப்பட்ட உள்ளன.
கோடைகாலத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 50 சிறப்பு ரயில்களை இயங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குமரி, நெல்லை, செங்கோட்டை, வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கு சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்படும். திருவனந்தபுரம், பெங்களூரு, மங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கும் தென்மாவட்டங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்படும்.
இந்திய ரயில்வே சார்பில் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோடைக் காலத்தில் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக ரயில்வே 380 சிறப்பு ரயில்கள் மூலம் 6,369 முறை இயக்கப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது. இது 2022ஆம் ஆண்டு இயக்கப்பட்ட கோடைக் கால சிறப்பு ரயில்களின் எண்ணிக்கைவிட அதிகமாகும்.
சென்ற ஆண்டு கோடைக் காலத்தில் 348 ரயில்கள் 4599 முறை இயக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு 1770 முறை அதிகமாக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வட இந்தியாவில் பாட்னா – செகந்திராபாத், பாட்னா – யஸ்வந்த்பூர், பரௌனி – முசாபர்பூர், டெல்லி – பாட்னா, புதுடெல்லி – கத்ரா, சண்டிகர் – கோரக்பூர், ஆனந்த் விஹார் – பாட்னா, விசாகப்பட்டினம் – புரி – ஹவுரா, மும்பை – பாட்னா, மும்பை – கோரக்பூர் நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தெற்கு ரெயில்வேயில் மட்டும் 50 சிறப்பு ரயில்கள் மூலம் 244 முறை இயக்கப்படும். தாம்பரம் – நெல்லை, தாம்பரம் – செங்கோட்டை, எழும்பூர் – கன்னியாகுமரி, எழும்பூர் – நாகர்கோவில், எழும்பூர் – வேளாங்கன்னி, திருவனந்தபுரம் – மங்களூரு ஆகிய நகரங்களுக்கு இடையே ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஆபரேட்டர்கள் ரயில் டிக்கெட் வழங்குவதில் முறைகேடு செய்வதையும், அதிக கட்டணம் வசூலிப்பதையும் தடுக்க, தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) ஊழியர்களைக் கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.