தென் மாவட்டங்களுக்குச் செல்லும் நெல்லை மற்றும் பொதிகை அதிவிரைவு ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு, மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் கூடுதலாகச் சேர்க்கப்படும். இந்த மாற்றம் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நடைமுறைக்கு வரும்.

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய ரயில்களான நெல்லை மற்றும் பொதிகை அதிவிரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் கூடுதலாகச் சேர்க்கப்படவுள்ளன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நடைமுறைக்கு வரவுள்ளன.

நெல்லை அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 12631/12632)

திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் (வண்டி எண்: 12632): ஆகஸ்ட் 1, 2025 முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும். சென்னையில் இருந்து புறப்படும் ரயில் (வண்டி எண்: 12631): ஆகஸ்ட் 4, 2025 முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரும்.

இந்த ரயில்களில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கை 8 இல் இருந்து 7 ஆகக் குறைக்கப்படும். அதற்குப் பதிலாக ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டி சேர்க்கப்படும். இதன் மூலம், மூன்றடுக்கு ஏசி பெட்டிகளின் எண்ணிக்கை 5 இல் இருந்து 6 ஆக அதிகரிக்கும்.

பொதிகை அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 12661/12662)

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தினசரி இயக்கப்படும் ரயில் (வண்டி எண்: 12661): வரும் ஆகஸ்ட் 2, 2025 முதல் இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டி ஒன்று நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டி இணைக்கப்பட உள்ளது.

மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை ரயில் (வண்டி எண்: 12662): ஆகஸ்ட் 3, 2025 முதல் இதேபோன்ற மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பெட்டி மாற்றங்கள், குளிர்சாதனப் பெட்டிகளில் பயணம் செய்ய விரும்புவோருக்கு கூடுதல் வசதியை அளிக்கும் அதே வேளையில், சாதாரண ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிப்போருக்கு ஒரு பெட்டி குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் பயணத் திட்டங்களை வகுக்கும்போது பயணிகள் இந்த மாற்றங்களைக் கருத்தில் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.