Asianet News TamilAsianet News Tamil

மக்களே அலர்ட்..! ஜாலியாக ஊருக்கு போலாம்..! பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்.. அறிவிப்பு வெளியானது..

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்தான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
 

southern railway announcement
Author
Tamilnádu, First Published Dec 22, 2021, 8:32 PM IST

தமிழர் திருநாள் என்றழைக்கப்படும் தைமாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17 வரை பொங்கல் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதனால் பேருந்துகள், ரயில்களில் மக்கள்கூட்டம் அலைமோதும். இதனைக் குறைக்கும் பொருட்டு ஒவ்வொரு பண்டிகையை முன்னிடும் சிறப்பு பேருந்துகள் மாநில அரசு தரப்பிலும் சிறப்பு ரயில்கள் ரயில்வே துறை தரப்பிலும் இயக்கப்படும். 

ஜனவரி 11ஆம் தேதிமுதல் 13ஆம் தேதிவரை சென்னையிலிருந்து மொத்தம் 10,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன் படி மூன்று நாட்களிலும் சென்னையிலிருந்து ஒரு நாளைக்கு 4000 வீதம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுக்கின்றன. சென்னை தவிர பிற ஊர்களில் இருந்து ஜனவரி 11 ஆம் முதல் 13 ஆம் வரை 6,468 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக மொத்தம் 16,709 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது பொங்கலை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன் படி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஜனவரி 12 ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இரவு 9.45 மணிக்கு நெல்லைக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 

ஜனவரி 13ஆம் தேதி நெல்லையிலிருந்து இரவு 9.30 மணிக்கு தாம்பரத்திற்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜனவரி 13ஆம் தேதி எழும்பூரிலிருந்து மாலை 3.30 மணிக்கு நாகர்கோவிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜனவரி 14ஆம் தேதி நாகர்கோவிலிலிருந்து மாலை 3.10 மணிக்கு சென்னை எழும்பூருக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios