மீண்டும் உக்கிரமான தென் மேற்கு பருவமழை… கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து வரலாறு காணாத அளவு தண்ணீர் திறப்பு…
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை மீண்டும் கொட்டி வருவதால் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகள் நிரம்பி வழிகின்றன. கபினி அணையில் இருந்து 80 ஆயிரம் கன அடி நீரும், கேஆர்எஸ் அணையில் இருந்து 55 ஆயிரம் கன நீரும் என மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து பிலிகுண்டுவில் தற்போது 60 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த மே மாத இறுதியில் கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளாவின் வயநாடு பகுதியிலும் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்ததால் கேஆர்எஸ் . ஆகிய இரு அணைகளும் நிரம்பின.
தொடர்ந்து மழை பெய்ததால் கர்நாடகாவில் இருந்து 1 லட்சம் கன அடி அளவுக்கு தண்ணீர் தறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையும் நிரம்பியது. 5 ஆண்டுகளுக்குப் பின் மேட்டூர் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த சில நாட்களாக மழை நின்றிருந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென் மேற்குப் பருவமழை மீண்டும் தனது உக்கிரத்தை காட்டத் தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக மீண்டும் கனமழை கொட்டி வருகிறது.
இதனால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் நேற்று மாலை இரு அணைகளும் மீண்டும் நிரம்பின. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டது.
கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கர்நாடக பகுதியில் காவிரி, கபிலா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவைவிட நீர்வரத்து குறைவாக இருந்ததால் தற்போது அணையின் நீர்மட்டம் 117.51 அடியாக உள்ளது..
தற்போது கர்நாடகாவில் இருந்து 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுவதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் இன்று மாநில எல்லையான பிலிகுண்டுலுவையும், நாளை மேட்டூர் அணையையும் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துசேர்ந்ததும் மீண்டும் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது. 120 அடியை எட்ட 3 அடி மட்டுமே தேவையாக உள்ளதால் 2 நாளில் நிரம்பிவிடும் என கூறப்படுகிறது.