இன்னும் 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் அநேக இடங்களிலும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் எனவும் காற்றழுத்த தாழ்வு வலுகுறைந்து காற்றழுத்த பகுதியாக மாறியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கன்னியாகுமரி அருகே நிலைகொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக நேற்று தென் தமிழகத்தில் கன மழை வெளுத்து வாங்கியது. 

இதில் தூத்துக்குடி மாநகர பகுதியில் 62 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 200 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தூத்துக்குடி மாநகரில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் சுமார் 2 அடி உயரத்துக்கு தேங்கியது.

இந்நிலையில், இன்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, வட தமிழகத்தில் அநேக இடங்களிலும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் எனவும் காற்றழுத்த தாழ்வு வலுகுறைந்து காற்றழுத்த பகுதியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சென்னையை பொறுத்தவரை சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிட்டார்.