கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடத்த தற்காலிக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

ஆனாலும், தற்காலிக சட்டம் தேவையில்லை. எங்களுக்கு நிரந்தர தடையில்லா சட்டம் வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல், உண்ணாவிரதம், ரயில் மறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக 9 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தூத்துக்குடி- மணியாச்சி, மதுரை - ராமேஸ்வரம், மதுரை- செங்கோட்டை, திண்டுக்கல் - மதுரை, ராமேஸ்வரம் – மதுரை (56723), காரைக்குடி - திருச்சி, திருச்சி - ராமேஸ்வரம், விருதுநகர் - திருச்சி, காரைக்கால் - பெங்களூரு ரயில்கள் இன்று ரத்து என குறிப்பிடப்பட்டுள்ளது.