Songs at the top of the mountain are compounds
பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. பெயர் வைக்கப்படாத இந்த புதிய படத்தில், நடிகர்கள் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, ஃபகத் பாசில், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்துக்கு கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தனது படங்களில் பாடல்களுக்கு தனி கவனம் செலுத்தும் மணிரத்னம், தனது வெற்றிக்கூட்டணியான வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மான் இருவரையும் பாடல் கம்போசிங்குக்காக ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்று 5 நாட்கள் அன்பு சிறை வைத்துள்ளார்.
இந்த மலை, கோவாவில் இருந்து 4 மணி நேரம் சாலை வழியே பயணம் செய்து, மராட்டிய மாநிலம் மலைக்குன்றில் சென்று முடிகிறது. அதுதான் இந்தியாவின் மேற்கு எல்லை. அந்த மலை உச்சியில் உள்ள ஒரு மாளிகையில்தான் பாடல் கம்போசிங் நடத்தப்பட்டுள்ளது,
இதமான தனிமையான, சுகமான காற்று, அழகான காட்சி, சுவையான உணவு என அமைந்த சூழ்நிலையில் பாடல்களை அருவிபோல் கொட்டியிருக்கிறாராம் வைரமுத்து.
வைரமுத்து ஒரே நாளில் 6 பாடல்களையும் எழுதி முடித்திருக்கிறாராம். 2 இரவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் 3 பாடல்களுக்கு மெட்டு போட்டிருக்கிறார். இது குறித்து மணிரத்னம் கூறும்போது எப்போதும் இளமை... அதுதான் கவிஞரின் கவிதைத் தமிழ் என்று சந்தோஷத்துடன் கூறியுள்ளார்.
புதிய படத்தின் படிப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாக தெரிகிறது. மணிரத்னம் - வைரமுத்து - ஏ.ஆர்.ரஹ்மான் என்று 25 ஆண்டுகள் கடந்த இந்த மெகா கூட்டணி, தற்போது 26 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்த படம் மணிரத்னத்துக்கு இன்னொரு அக்னி நட்சத்திரம் என்று கூறியிருக்கும் கவிஞர் வைரமுத்து, படத்தின் தலைப்பை கேட்டபோது, தலைப்பில் கவிதை மணக்கும். ஆனால், அது மணிரத்னம் சொன்னால்தான் இனிக்கும் என்று கூட்டணி தர்மத்தை மீறாமல் பதில் கூறினார்.
