மதுரையை அடுத்த நாகமலைபுதுக்கோட்டை மேலகுயில்குடி ரோட்டில் வசித்து வருபவர் புஷ்பம் (55). இவர் அப்பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவரிடம் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடனாக பணம் வாங்கினார். இந்த பணத்தை குறித்த தேதியில் உமா திரும்ப தராததால் அவரை கண்டபடி திட்டியதுடன் பணத்தை உடனடியாக திரும்பித் தருமாறு புஷ்பம் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து உமா, தனது 17 வயது மகன் மூலம் பணம் கொடுத்து அனுப்பினார். புஷ்பத்தின் வீட்டிற்கு வந்த அந்த வாலிபர், கையில் மிளகாய் பொடியை காண்பித்து புஷ்பத்தை மிரட்டினார்.
பின்னர் திடீரென புஷ்பத்தின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றார். அப்போது அவனை அருகில் உள்ளவர்கள் பிடித்து நாகமலைபுதுக்கோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். கழுத்து அறுக்கப்பட்டதில் காயம் அடைந்த புஷ்பம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
விசாரித்ததில், தனது அம்மாவை திட்டியதால் அந்த வாலிபர் ஆத்திரமடைந்து இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக நாகமலைபுதுக்கோட்டை காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
