திருவள்ளூர்

திருவள்ளூரில் சாராயம் குடிக்க பணம் தராத மாமியாரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மருமகனை காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த பீமன்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதி (80). இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மகன் விஜயகுமார் குடும்பத்துடன் பூந்தமல்லியில் வசித்து வருகிறார்.

பார்வதியின் கடைசி மகள் நாகபூஷணம் (55), அவரது கணவர் ராதாகிருஷ்ணன் (58) ஆகியோர் பீமந்தோப்பு கிராமத்தில் வசித்து வருகின்றனர். அவருடன் பார்வதியும் வசித்து வந்தார்.

ராதாகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் தினமும் குடித்துவிட்டு வந்து மாமியார் மற்றும் மனைவியிடம் தகராறு செய்வது வழக்கமாம். மேலும், கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில் நாகபூஷணம், நேற்று ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணிக்கு வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் இருந்த ராதாகிருஷ்ணன், பார்வதியிடம் சாராயம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

பணம் கொடுக்க பார்வதி மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன், அருகில் இருந்த கல்லை எடுத்து பார்வதியின் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பார்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் புல்லரம்பாக்கம் காவலாளர்களுக்குத் தகவல் கொடுத்ததன்பேரில் அங்கு வந்த காவலாளர்கள் பார்வதியின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து ராதாகிருஷ்ணனை வலைவீசி தேடி வருகின்றனர்.