Son did not bother asking for money to go to work is often cut by scythe mother

தேனியில் வேலைக்கு போகாமல் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து, வீட்டிற்கு சுமையாய் இருந்த மகனை அரிவாளால் வெட்டி தாய் கொலை செய்தார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி ஆர்.டி.யு காலனியைச் சேர்ந்த தொழிலாளி சின்னகாளியப்பன். இவருடைய மனைவி பேச்சியம்மாள் (40). இவர்களுக்கு அழகுராஜா (19), சிவக்குமார் ஆகிய இரண்டு மகன்களும், அழகேஸ்வரி என்ற மகளும் இருக்கின்றனர்.

இதில் அழகுராஜா, பெரியகுளம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் பட்டயப்படிப்பை இரண்டு ஆண்டுகள் படித்துவிட்டு பின்னர் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டார்.

வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்த அழகுராஜா, தினமும் செலவுக்கு பணம் கேட்டு பேச்சியம்மாளை தொந்தரவு செய்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் வைத்திருந்த பணத்தை, பேச்சியம்மாளுக்குத் தெரியாமல் அழகுராஜா திருடி செலவு செய்துவிட்டார். இதனை பேச்சியம்மாள் கண்டித்துள்ளார். மேலும் நேற்று காலையும் வீட்டில் இருந்த பணத்தை எடுக்கும்போது தாய் தடுத்துள்ளார். இதில் கோபமடைந்த அழகுராஜா, பேச்சியம்மாளை அடித்துள்ளார்.

ஒருகட்டத்தில் பேச்சியம்மாள், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அழகுராஜாவின் தலையில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அழகுராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், இதுகுறித்த தகவல் தென்கரை காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்டு, காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அங்கு, அழகுராஜாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக காவலாளர்கள் வழக்குப்பதிந்து பேச்சியம்மாளை கைது செய்தனர்.

வேலை எதுவும் செய்யாமல், எப்போ பார்த்தாலும் பணம் கேட்டு தொந்தரவு செய்வதும், வீட்டுச் செலவுக்கு வைத்திருக்கும் பணத்தை திருட்டு தனமாக எடுத்து செலவு செய்வதுமாக இருந்ததால் தனது மகனை வெட்டி விட்டேன் என்று அழுதுகொண்டே தாய் பேச்சியம்மாள் தெரிவித்தார்.