விருதுநகரில் 

விருதுநகர் நகராட்சியில் பழுதடைந்து மோசமாக இருக்கும் சாலைகள அனைத்தையும் சீரமைத்து தரக்கோரி நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

விருதுநகர் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் பாலகிருஷ்ணசாமி நெடுஞ்சாலைத்துறைக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். 

அந்த மனுவில், "விருதுநகர் நகராட்சி பகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கிருஷ்ணமாச்சாரியார் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. 

எம்.ஜி.ஆர்.சிலை அருகில் வாகனங்கள் செல்ல முடியாத அளவில் சேதம் அடைந்துள்ளது. 

சிவகாசி நான்கு வழிச்சாலையில் இருந்து விருதுநகருக்குள் வரும் சாலையும் மோசமான நிலையில் உள்ளது.

அருப்புக்கோட்டை சாலையில் மேம்பாலம் தொடங்கும் இடத்தில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. அல்லம்பட்டி – ராமமூர்த்தி ரோடு சந்திப்பிலும், கம்மாபட்டி பகுதியிலும் மிகப்பெரிய பள்ளங்கள் உள்ளன. 

அரசு மருத்துவமனை முன்புள்ள சாலையும் மிக மோசமான நிலையில் உள்ளது. அல்லம்பட்டி சந்திப்பில் இருந்து அரசு மருத்துவமனை சந்திப்பு வரை உள்ள ராமமூர்த்தி சாலை மட்டும் அகலப்படுத்தப்படாமல் உள்ளது. 

இந்த சாலையை அகலப்படுத்தவும், மற்ற சாலைகளை சீரமைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தார்.

அதேபோன்று, நகராட்சி ஆணையருக்கும் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த மனுவில், "விருதுநகர் நாராயணமடம் தெருவில் பல இலட்சம் ரூபாய் செலவில் ஏழை, எளிய மக்கள் பயன்பாட்டிற்காக சமுதாய கூடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. 

சில ஆண்டுகளுக்கு முன்னர் நகராட்சியின் பின்புறம் உள்ள கட்டிடத்தை இடிப்பதற்காக அதில் இருந்த அலுவலக பொருட்களை எந்தவித திட்டமிடலும் இல்லாமல் சமுதாய கூடத்துக்கு மாற்றிவிட்டனர்.

இதுவரை நகராட்சி அலுவலகத்தில் இடிக்கப்பட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்ட எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்றும் தெரியவில்லை. 

எனவே, சமுதாயகூடத்தின் கீழ் பகுதியில் உள்ள பொருட்களை அதன் மேல்பகுதிக்கு மாற்றி பாதுகாப்பாக வைத்து பூட்டிவிட்டு கீழ் பகுதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தார்.