தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 23 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தன. இதனையடுத்து அவர்களுடன் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

நிலுவை தொகையாக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூறியிருந்தன. ஆனால், அரசோ ரூ.750 கோடி ஒதுக்கப்படும் என கூறியது. இதனை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை.

அரசுடனான பேச்சுவார்த்தை நேற்று தோல்வி அடைந்ததை ஒட்டி அரசு பேருந்து போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று மாலையே சில இடங்களில் தங்களது வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

இன்று காலை முதல் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து கழகத்தினரின் வேலைநிறுத்தம் தொடங்கியது.

காலை தொடங்கிய வேலைநிறுத்தத்தை முறியடிக்க அரசு, தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கி வருகிறது. இதனை கண்டித்து பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுவரை தமிழகத்தில் 23 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இதை பார்க்கும்போது தொழிற்சங்கத்தின் வேலைநிறுத்தத்தை அரசாங்கம் அலட்சியப்படுத்துவதும், அதனால், கண்ணாடிகளை உடைத்து தொழிற்சங்கத்தினர் அடாவடியில் இறங்கி இருப்பதும் வேதனை அளிக்கும் ஒன்றாக உருவெடுத்துள்ளது.