பழையன கழிதலும் புதியன புகுதலும் என கூறும் போகி பண்டிகையான இன்று, அதிகாலையிலேயே ஏராளமான மக்கள், போகி கொளுத்தினர். பழைய பாய், துடைப்பம், முரம் உள்பட தேவையில்லாத பொருட்களை தீயிட்டு எரித்தனர். இதனால், இன்று காலை சுமார் 4 மணி முதல் சென்னை நகரம்  முழுவதும் கடும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

மேலும், மார்கழி மாத பனியும், கண்களை மறைத்தன. காலை 9 மணிவரை சாலையில் செல்லும் வாகனங்கள், முகப்பு விளக்கை எரிய வைத்தபடி சென்றனர். சாலை முழுவதும் கடும் புகை மற்றும் பனியால் எதிரே செல்லும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத நிலை உள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு அண்ணா மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து செல்லும் வாகனங்களுக்கு, பாலத்தின் மேல் பகுதியில் செல்லும் வாகனங்கள் தெரியவில்லை. இதனால், பார்க்கிங் விளக்குகளை போட்டு செல்கின்றனர். அதேபோல் பாலத்தில் இருந்து கீழே இறங்கும் வாகனங்களும், பொறுமையாகவே சென்றன.