திருவள்ளூர்

சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் மின்சார இரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த கருப்பு பையில் இருந்து திடிரென புகை வந்ததால் வெடிகுண்டு என நினைத்து பயணிகள் பீதி அடைந்தனர். 

சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி புறநகர் மின்சார இரயில் நேற்று காலை 7 மணிக்கு புறப்பட்டது. 

இந்த இரயில் 8.10 மணிக்கு செவ்வாப்பேட்டை அருகே வந்தபோது, பயணிகளின் இருக்கையில் கேட்பாரற்றுக் கிடந்த கருப்பு நிற பையில் இருந்து புகை வந்தது. இதனால், பையில் இருப்பது வெடிகுண்டு என நினைத்து அச்சம் அடைந்த பயணிகள் பையை தண்டவாளத்தில் வீசி எறிந்தனர். 

செவ்வாப்பேட்டையில் இரயில் நின்றதும் இதுகுறித்து இரயில் நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இரயில்வே பாதுகாப்பு படை காவலாளர்கள் விரைந்து சென்று, பயணிகள் தண்டவாளத்தில் வீசியெறிந்த பையை சோதனை செய்தனர். 

அதில், கண் பார்வையற்றோர் மைக் மூலம் பாடுவதற்காக வைத்திருந்த பேட்டரியும், வயர்களும் இருந்தது தெரியவந்தது. அதிக வெப்பத்தின் காரணமாக பேட்டரியில் இருந்து புகை வெளியேறி இருக்கலாம் என்று அந்த பையை ஆய்வு செய்த காவலாளர்கள் தெரிவித்தனர். 

அதன்பின்னர்தான் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தால் செவ்வாப்பேட்டையில் நிறுத்தப்பட்ட இரயில் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.