விருதுநகர் அருகே  வீட்டுத் திண்ணையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த 10 வகுப்பு சிறுமியை கத்தி முனையில் கடத்திச் சென்று ஒரு வீட்டில் அடைந்து வைத்து பல முறை கற்பழித்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.  

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு மலையடிபட்டியைச் சேர்ந்த சிறுமி அங்குள்ள 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் தனியார் நூற்பு ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர்.

அவர்கள் இரவு வேலைக்குச் செல்லும்போது தாத்தா வீட்டில் தங்கி மாணவி படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தாத்தா வீட்டில் இருந்த மாணவி, திண்ணையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவளை காணவில்லை. வேலை முடிந்து வீடு திரும்பிய பெற்றோர், மகளை தேடினர்.இந்த நிலையில் பக்கத்து தெருவில் மாணவி அழுது கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பெற்றோர் அங்கு சென்று அவரை மீட்டுவந்து விசாரித்தனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா  என்பவரது மகன் வெனிஸ்குமார் கத்தியை காட்டி மிரட்டி மாணவியை, அந்தப் பகுதியில் ஆள் இல்லாத வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு வைத்து அவர் பல முறை சிறுமியை கற்பழித்தாகவும்  மாணவி தெரிவித்தார்.அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதைத்தொடர்ந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வெனிஸ் குமார் கைது செய்யப்பட்டார். பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.