Sixty women fight against the municipal office ...
திருவள்ளூர்
வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கழிவுநீரை அகற்ற வலியுறுத்தி ஆவடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் முழுவதும் மழைநீர் தேங்கியும், கழிவுநீர் கலந்தும் உள்ளன. இதனால் கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனைக் கண்டித்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த அறுபதுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆவடி நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார அலுவலர் கபாலி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். “உடனே மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.
அதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.
