இராமநாதபுரம் 

நீதிமன்ற உத்தரவை மீறி இராமேசுவரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து குடிநீர் எடுக்கப்படுவதால் ஆறு கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரம்  மாவட்டம், தங்கச்சிமடத்தை அடுத்துள்ள செம்மமடம், மெய்யம்புளி, நொச்சிவாடி, தென்குடா உள்பட ஆறு கிராம மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"தங்கள் பகுதியில் இருந்து நீதிமன்ற உத்தரவை மீறி இராமேசுவரத்துக்கு கூடுதலாக குடிநீர் எடுக்கப்படுவதற்கு கண்டனம்" தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் சிவா, கருணாகரன் தங்கச்சிமடம் பசீர், வல்லவ கணேசன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 

இதில், "செம்ம மடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதலாக குடிநீர் எடுத்து இராமேசுவரத்தில் விநியோகிப்பதாகவும், மாலை 6 மணிக்கு மேல் குடிநீர் எடுக்கக்கூடாது" என்றும் நீதிமன்றம் உத்தரவு இருந்தும் அதனை மீறி இரவு நேரங்களில் டேங்கர் லாரிகளில் கூடுதலாக தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர், எனவே, இதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் அங்கிருந்து தாலுகா அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தாசில்தார் சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அதில் மாலை 6 மணிக்கு மேல் குடிநீர் எடுப்பது தடுக்கப்படும் என்றும், நீதிமன்ற உத்தரவுப்படி குடிநீர் எடுப்பதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். அதனை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.