சிவகங்கை

மானாமதுரை மற்றும் சிக்கலில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஆறு லாரிகளை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். ஓட்டுநர்களை கைது செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வளநாடு பகுதியில் கண்மாய் ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக மானாமதுரை காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் காவலாளர்கள் அப்பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது கண்மாய் ஓடையில் மணல் அள்ளிக் கொண்டிருந்த மூன்று லாரி ஓட்டுர்களிடம் விசாரித்தபோது அவர்கள் அனுமதியின்றி மணல் அள்ளுவது தெரிந்தது.

உடனே காவலாளர்கள் அந்த மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோன்று, சிக்கல் அருகே தத்தங்குடி கண்மாயில் அரசு அனுமதியின்றி திருட்டு மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து கீழக்கிடாரம் குரூப் கிராம நிர்வாக அலுவலர் ராம்குமார் சிக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் ஆய்வாளர் குமரன் தலைமையிலான காவலாளர்கள் சோதனை நடத்தினர். அப்போது எந்தவிதமான அனுமதியும் இன்றி மூன்று டிப்பர் லாரிகளுடன் திருட்டு தனமாக ஒரு கும்பல் மணல் அள்ளிக் கொண்டிருந்தது.

இதனையடுத்து திருட்டுத்தனமாக மணல் அள்ளியதாக கொழுந்துரை நாகராஜ், கள்ளியேந்தலைச் சேர்ந்த சிங்கதுரை, வெண்ணிவயலைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகிய மூவரையும் காவலாளர்கள் கைது செய்தனர். 

தப்பியோடிய கீரந்தையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, பூசேரி சதீஸ் ஆகியோரைத தேடி வருகின்றனர்.  மணல் அள்ளிவந்த மூன்று லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.