சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் வைக்கப்பட்டிருந்த  நடிகர் சிவாஜி கணேசனின் சிலை நள்ளிரவில் அதிரடியாக அகற்றப்பட்டது.

கடந்த 2006 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது, மெரினா கடற்கரையில் , காமராஜர் சாலை-ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் காந்தி சிலை அருகே, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. .

இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சிலையை அகற்றும்படி நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. அகற்றப்படும் சிவாஜி சிலை, அடையாறு அருகே கட்டப்படும் சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதை எதிர்த்தும், அகற்றப்படும் சிவாஜி சிலையை, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் காந்தி - காமராஜர் சிலைகளின் வரிசையில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் 'நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை' சார்பில் வழக்குத் தொடப்பட்டது.

இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் சிலையை இடமாற்றம் செய்ய எந்த தடையும் இல்லை என ஜூலை 18ம் தேதி மீண்டும் தீரப்பளித்தது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் நடிகர் சிவாஜி சிலை அகற்றும் பணி துவங்கப்பட்டு, அதிகாலையில் பத்திரமாக சிலை அகற்றப்பட்டது. அகற்றப்படும் சிலையானது, விரைவில் அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.