sister and brother attacked by elephant enter into village
கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில் ஊருக்குள் புகுந்த காட்டுயானை அக்கா, தம்பியை தாக்கியது. பலத்த காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைக்கட்டி மலைப் பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இந்த யானைகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களுக்குள் நுழைந்து வாழை, தென்னை உள்ளிட்டப் பயிர்களை நாள்தோறும் தின்றும், வீடுகளை சேதப்படுத்தியும் வருகின்றன. ஒரு சில நேரங்களில் மனித – விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை காட்டுயானை ஒன்று கணுவாயை அடுத்த சின்னதடாகத்திற்குள் புகுந்தது. பின்னர் அங்குள்ள செங்கல் சூளைக்குச் சென்ற அந்த யானை, அருகில் உள்ள வீடுகளின் கதவு மற்றும் மேற்கூரையை துதிக்கையால் தள்ளி சேதப்படுத்தியது.
சத்தம் கேட்டு ஒரு வீட்டில் இருந்து வெளியே வந்த தவமணி என்பவரின் மனைவி சுசிலாவை (30) அந்த யானை துதிக்கையால் தாக்கியது.
அதனைத் தொடர்ந்து பக்கத்து வீட்டில் இருந்து வெளியே வந்த சுசிலாவின் தம்பி ஜோதிபாசு என்பவரை துதிக்கையால் தூக்கி வீசியது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு மக்கள் அங்கு திரண்டு வந்தனர்.
இதற்கிடையே யானையின் தாக்குதல் குறித்து தகவலறிந்து வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மக்களும், வனத்துறையினரும் சேர்ந்து பட்டாசு வெடித்து அந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
இதில் பலத்த காயமடைந்த சுசிலா மற்றும் ஜோதிபாசு ஆகியோர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
